தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி.. ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும்
ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.
உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழுங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும்.
ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும்
தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது.
No comments:
Post a Comment