வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும்.
இந்த பாலிசியை எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் இனி...
1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி. இந்த பாலிசியில் நிரந்தர , தற்காலிக ஊனங் களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பீரிமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும்.
3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும்.
4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.
உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழுங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும்.
5. ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும்.
6. இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவு களுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.
7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித க்ளெய்மும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5% போனஸாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50% வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன.
8. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்ஷூரன்ஸுக்கும் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும்.
9. இந்தக் காப்பீட்டில் க்ளெய்ம் செய்யும்போது எந்தமாதிரியான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகக் குறிப்பிட்டிருந்தால்தான் அதற்கான இழப்பீடு காலதாமதம் இல்லாமல் கிடைக்கும் என்பதை மறக்கக்கூடாது.
10. எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் அதேநேரத்தில், எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக, தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது.
No comments:
Post a Comment