பெண்களுக்கான நோய்கள்:
ரத்தசோகையைப் போக்கும் உணவுகள்
இந்தியாவில் 59 சதவிகிதப் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கர்ப்பிணிகளில் 50 சதவிகிதம் பேர் ரத்தசோகைப் பாதிப்பு உள்ளவர்கள்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இதுதான் இந்தியப் பெண்களின் நிலை. நம்முடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்கிற சிவப்பு அணுக்கள் உள்ளன. இவைதான், உடல் முழுவதும் ஆக்சிஜனை சுமந்து செல்கின்றன. இந்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும்போது ரத்தசோகை ஏற்படும். நம்முடைய உடலால் போதுமான அளவு ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்திசெய்ய முடியாத நிலை, ரத்தம் வெளியேறுதல், குடல் புழுக்கள் என ரத்த சோகை ஏற்படக் காரணமாக இருந்தாலும் நம் ஊரில் ஊட்டச்சத்துக் குறைபாடே மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படுகிறது.
ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க
* தாமரைத் தண்டில் அதிக அளவு இரும்புச்சத்து, வைட்டமின் சி உள்ளன. தொடர்ந்து இதைச் சாப்பிட்டுவந்தால், சில நாட்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.
* சுண்டைக்காயில் உள்ள கசப்பு, வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும். ரத்தம் உடலில் ஊற உதவிசெய்யும்.
* சிவப்பு, பிரவுன், கறுப்பு அரிசி என நாள்தோறும் ஒரு அரிசியை ஒரு கப் அளவுக்கு வேகவைத்துச் சாப்பிடலாம்.
* அவல் உப்புமா, அவல் பொரி, அவல் கிச்சடி, அவல் பணியாரம், கட்லெட், ஸ்வீட்ஸ் என ஏதேனும் ஒரு வகையில் அவலை நொறுக்குத் தீனியாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
* இரும்புப் பாத்திரங்களில் உணவைச் சமைத்தால், இரும்புச்சத்து அதிலிருந்து கிடைக்கும். பொதுவாக, வாணலியை இரும்புப் பாத்திர வாணலியாக வீட்டில் பயன்படுத்துவது நல்லது. இதனால், வதக்கல், பொரியல் போன்றவற்றில் ஓரளவு இரும்புச்சத்து சேரும்.
* தினமும் மூன்று பேரீச்சம்பழம், 10 காய்ந்த திராட்சைகளைச் சாப்பிட்டுவரலாம்.
* அனைத்து வகைக் கீரைகள், குறிப்பாக முருங்கைக் கீரை, பீட்ரூட் மேல் பகுதி உள்ள கீரை மற்றும் தண்டு, முள்ளங்கிக் கீரை, கோதுமைப் புல், வாழைப்பூ, சோயாபீன்ஸ், ராஜ்மா, காராமணி போன்ற பயறு மற்றும் பருப்பு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் ரத்தம் உற்பத்தியாகும்.
* இரும்புச்சத்தைக் கிரகிக்க வைட்டமின் சி அவசியம். இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ளும்போது, வைட்டமின் சி உள்ள சிட்ரஸ் உணவு வகைகளைச் சாப்பிடுவதால், எளிதில் இரும்புச்சத்து உடலில் சேரும். முழு நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடிப் பழங்களைச் சாப்பிடுவதால் வைட்டமின் சி உடலில் சேர்ந்து, இரும்புச்சத்தை உடல் கிரகிக்க உதவும்.
* முட்டை, ஈரல், மண்ணீரல், ஆடு மற்றும் கோழி இறைச்சியில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இவற்றைச் சாப்பிடும்போது, உடல் எளிதில் இரும்புச்சத்தைக் கிரகிக்கும். வேகமாக இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளில்தான் அதிகம்.
* எவ்வளவு சாப்பிட்டாலும் ‘வெயிட் ஏறவே மாட்டேங்குது’ எனும் புகார் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்த்து, வயிற்றில் பூச்சி இருக்கிறதா எனக் கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்ட பின், சத்துள்ள ஆகாரங்களை உண்டால், உடனடியாக உடலில் எடை கூடும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தமும் உடலில் உற்பத்தியாகும்.
* குழந்தைகளுக்கு ரத்தசோகை இருந்தால் அவர்களின் நோய் * எதிர்ப்பு சக்தியே பாதித்துவிடும். தோசை மாவில் கீரைகளைச் சேர்ப்பது, பீட்ரூட் ஜூஸ், தாமரைத் தண்டு துவையல், வாழைப்பூ வடை இப்படி மாற்று வகையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு வரும் ரத்தசோகை பிரச்னையை எளிதில் குணப்படுத்த முடியும்.
ரத்தசோகையை எப்படிக் கண்டுபிடிப்பது?
1. ஆரோக்கியமாக இருப்பவரின் கண்களின் கீழ் இமையின் உட்புறம் இளஞ்சிவப்பாக இருக்கும். அதுபோல, நகமும் இளஞ்சிவப்பாகத் தெரியும்.
2. ரத்தசோகையினருக்கு கண்களின் கீழ் இமை வெள்ளையாக இருக்கும். நகங்களும் வெளேரென இருக்கும். அப்படியே நகங்களை அழுத்திப் பிடித்தால் வெள்ளையாகவே நகம் காட்சியளிக்கும். ரத்த ஓட்டம் தெரியாது. ரத்தப் பரிசோதனை மூலமாகவும் ரத்தத்தின் அளவைக் கண்டறியலாம்
சிறந்த மருத்துவக்காப்பீடு ஆலோசனைகளுக்கு 9840177017 அழைக்கவும்
#StarHealth #mediclaimagent #மருத்துவக்காப்பீடு