அன்னையர் தினம்: மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது 10.05.20
“தாயிற் சிறந்த கோயிலுமில்லை" என்ற வரிகள் தாய்மையின் “புனிதத்துவம்”, தாய்மையின் “பெருமை”, தாய்மையின் “தியாகம்” தாய்மையின் “கருணை உள்ளம்” போன்றவற்றை எடுத்துக் கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை என்பதனால் கோயிலாக ஒப்பிடுகிறார்கள் எனலாம். “அம்மா..” என்ற இன்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்கள் ஆயிரமாயிரம். ஒருவர் தனது இன்பத்தின் போதும், துன்பத்தின்போதும் கூவி அழைக்கும் அன்புத் தெய்வமும் அம்மாவே.
ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் “அன்னை” என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கின்றது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது
தனது உணவில் ஒரு பகுதியை கருவிலிருக்குபோது 10 மாதங்களாக ஊட்டி வளர்த்து, குழந்தையாக பிரசவித்த பின்னர் தனது உதிரத்தையே பாலாக மாற்றி பருகத்தந்து வளர்த்தெடுப்பவளும். தன் அன்பு நிறைந்த இனிய மொழிகளால் உலகம் போற்றும் உத்தமர்களாக உருவாக்குபவளும் அன்னையே. உந்தியிலும், மடியினிலும், தோழிலினிலும் சுமந்து உணவூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தெடுத்த அந்த அன்புத் தெய்வத்தை ஆதரித்து அன்பு செலுத்த ஒருநாள் போதுமா?அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று. மக்கள் தங்கள் அன்னையரை மிக உயர் நிலையில் வைத்து அன்புடன் கெளரவமாக, வாழ்நாள் பூராவும் பணிவிடை செய்து, நன்றிக்கடனை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அன்னையின் பெறுமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும்
No comments:
Post a Comment